காஞ்சிபுரம்:சர்வதேச யோகா தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில், ஒன்பது மாத கர்ப்பிணியான, ஆயுர்வேத மருத்துவர் ஒருவர், 60 முட்டைகள் மீது அமர்ந்து, 80 நொடிகள் பத்மாசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 21ல், காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லுாரி, தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது.இதில், காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணியான ஆயுர்வேத மருத்துவர் ஒருவர், 60 முட்டைகள் மீது அமர்ந்து, 80 நொடிகள் பத்மாசனம் செய்த வீடியோ 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆயுர்வேத பெண் மருத்துவர் பானுபிரியா, 25, கூறியதாவது:நான் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.ஆறாம் வகுப்பு முதல், மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவில் நடந்த யோகாசன போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன்.
கடந்த 21ல் எட்டாவது சர்வதேச யோகா தினம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன்.அதன்படி, என் யோகா மாஸ்டர் திருநாவுக்கரசுவின் ஆலோசனை படி, 60 முட்டைகள் மீது அமர்ந்து, 80 நொடிகள் பத்மாசனம் செய்துள்ளேன்.முறையாக யோகசானம் செய்வதன் வாயிலாக கர்ப்பிணியருக்கு, 100 சதவீதம் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.