பொள்ளாச்சி: தமிழக - கேரள இரு மாநில ஒப்பந்தம் உள்ள சூழலில், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியுமா என்பது குறித்து, ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு, ஆழியாறிலிருந்து குடிநீர் எடுத்துச்செல்லும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, பி.ஏ.பி., விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை. தற்போது இத்திட்டத்தை அனுமதி வழங்க முடியாது என விவசாயிகள் போராட தயாராகிவிட்டனர்.
இந்நிலையில், ஆளுங்கட்சி தரப்பில், என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகளிடம் பேச்சு நடத்த அழைக்கின்றனர். இதை அரசியல் ரீதியாக கவனிக்காமல் விஞ்ஞான ரீதியாக சிந்திக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:
உள்ளூர் நீர் வளங்களை அழித்து விட்டு, தொலைதுார திட்டங்கள் வாயிலாக குடிநீர் பிரச்னையை தீர்க்க முயல்வது தவறான அணுகுமுறையாகும். இது பல பகுதிகளுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கும். ஆழியாறு ஆற்றில் வரும் வெள்ள நீரை திருப்புவதாக கூறுகின்றனர். இது, இரு மாநில பிரச்னைகளை அதிகமாக்கும். பி.ஏ.பி., திட்டம், தமிழக - கேரள இருமாநில ஒப்பந்த திட்டமாகும். மொத்த நீர் வளத்தில், 30.50 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கும், 19.55 டி.எம்.சி., நீர் கேரளத்திற்கும் பகிர்ந்துக்கொள்ளும் திட்டமாகும்.
இந்த திட்டத்தில், ஆனைமலையாறு அணை இன்னும் கட்டப்படவில்லை. அதனால், 2.50 டி.எம்.சி., நீர், 52 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.தற்போது, தமிழகம், 28 டி.எம்.சி., பெறவேண்டும். கடந்த, 20 ஆண்டுகளாக சராசரியாக, 24 டி.எம்.சி.,க்கு குறைவாகவே நீர் கிடைக்கிறது. கேரளாவிற்கு பெரும்பாலான ஆண்டுகளில், 19.55 டி.எம்.சி., நீர் கிடைக்கிறது. சில ஆண்டுகள் வறட்சி காரணமாக, கேரளாவுக்கு, 16 - -17 டி.எம்.சி., நீர் மட்டுமே வழங்கப்பட்டது. அதற்கே ஒப்பந்த மீறல் என பதிவு செய்து நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
இதற்கிடையே, பி.ஏ.பி., திட்டம் காங்கயம் வெள்ளகோவில் பகுதிகளுக்கு, எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், தண்ணீர் பற்றாகுறை அதிகமானது.கடந்த, 1994க்கு பின், மூன்று மண்டலங்களாக இருந்த பாசனம், நான்கு மண்டலங்களாக மாற்றப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு மண்டலத்திற்கு, 6 - 8 சுற்று நீர் கிடைத்தது, தற்போது, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மண்டலத்திற்கும், 4 - -5 சுற்றுகள் மட்டுமே நீர் கிடைக்கிறது. இது தவிர, குடிநீர் திட்டங்களுக்கு இரண்டு டி.எம்.சி., குடிநீர் வழங்கப்படுகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு முன், கிணத்துக்கடவு மற்றும் குறிச்சி, குனியமுத்துார் பகுதிகளுக்கு ஆழியாறு குடிநீர் கொண்டு செல்லப்பட்டதற்கு, கேரள மாநில அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.பி.ஏ.பி., திட்டத்தில் உள்ள வெள்ளகோவில், காங்கயம் பகுதிகள் அமராவதி ஆற்றுப்படுக்கைக்கு உட்பட்டது. காவிரி படுகையின் துணைப்படுகையாக இருப்பதால், அங்கு, பி.ஏ.பி., திட்டம் விரிவுபடுத்தப்பட்டதை இன்றும் விதிமீறல் என கேரள அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் வழங்கினால் பல பிரச்சனைகள் ஏற்படும். இதை அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு மாற்று வழி முறைகள் உள்ளன.
இதையும் மீறி, ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு சென்றால், பி.ஏ.பி., பாசனத்துக்கு மேலும் நீர் பற்றாக்குறை ஏற்படும். ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களின் எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக அமையும்.ஆழியாறில் இருந்து, ஒட்டன்சத்திரத்துக்கு நீர் எடுக்க நினைப்பது, பி.ஏ.பி., விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும். இந்த வடிநிலங்களில், 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதால், விவசாயிகளின் கஷ்டங்கள், தண்ணீர் வழங்கும் பொறியாளர்களின் சிரமங்கள் தெரிந்து, இதை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஒட்டன்சத்திரத்துக்கு மாற்றுவழி இருக்கு
காவிரியில் சராசரியாக, 30 --- 50 டி.எம்.சி., நீர் உபரியாக செல்கிறது. திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள சிறு நகரங்களுக்கும் காவிரி நீர், மாயனுார் தடுப்பணை பகுதியிலிருந்து எடுத்து வினியோகிக்கப்படுகிறது.அந்த பாதையிலேயே, இன்னொரு குழாய் அமைத்து ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லலாம். மேலும், ஒட்டன்சத்திரம் பகுதி குடகனாறு அமராவதி வடிநிலங்களில் அமைந்துள்ளதால், காவிரியின் துணைப்படுகைகளில் இருந்து, தண்ணீர் பெற 100 சதவீதம் சாத்தியமுள்ளது. அமராவதியில் இருந்து குடிநீர் திட்டத்தை செயல்படுத்தலாம். ஒரு திட்டம் ஆய்வு செய்யும்போது இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும், என, இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.