சென்னை: மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியதில் மரம் சாய்ந்து, அந்த வழியாக வந்த காரில் விழுந்ததில், வங்கி பெண் மேலாளர் உடல் நசுங்கி பலியானார். அவரின் தங்கை, டிரைவர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சென்னை போரூர், மங்கலம் நகர், 5வது தெருவைச் சேர்ந்தவர் கபிலன். இவரது மனைவி வாணி, 57. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர். இவர், நெற்குன்றத்தை சேர்ந்த தங்கை எழிலரசி, 52, என்பவருடன், நேற்று மாலை காரில், கே.கே. நகர் பகுதிக்கு வந்தார். காரை, கார்த்திக் என்பவர் ஓட்டினார். லட்சுமணன் சாலையில் இருந்து, பி.டி.ராஜன் சாலை வழியாக கார் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக, பெரிய மரம் ஒன்று அடியோடு சாய்ந்து, இவர்களின் காரில் விழுந்தது. காரின் பின்புறம், வாணி, எழிலரசி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மரம் விழுந்ததில், கார் பின் பக்கம் நொறுங்கியது.
இதில், வாணி உடல் நசுங்கி பலியானார். எழிலரசி, ஓட்டுனர் கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்து, கே.கே.நகர் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து எழிலரசி, கார்த்திக் ஆகியோரை மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர், வாணி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மழை நீர் வடிகால் பணிக்காக லட்சுமணன் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அதில் மண் சரிவு ஏற்பட்டு, மரம் சாய்ந்து, காரில் விழுந்தது தெரிந்தது.மாநகராட்சி விளக்கம்:கே.கே. நகர் பகுதியில், இரண்டு நாட்களாக மழை நீர் வடிகால் பணி நடைபெறவில்லை. மழை நீர் வடிகால் பணிக்கும், மரம் இருந்த இடத்துக்கும் ௨ மீட்டர் இடைவெளி உள்ளது. மரம் இயற்கையாக விழுந்ததாக, மாநகராட்சி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.