சென்னை: 'பொய் வழக்கு தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று ஸ்டாலின், மம்தா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணியின் துாண்டுதலின் பேரில், ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை கண்டித்து, மாபெரும் போராட்டத்தை தமிழக பா.ஜ., முன்னெடுத்தது.நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய பா.ஜ., நிர்வாகிகள், 15 பேர் மீது வழக்கு தொடுத்து, ஆறு பேரை அறிவாலயம் அரசு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வர, அனைத்து முயற்சிகளையும் பா.ஜ., செய்து வருகிறது.
எங்கள் நிர்வாகிகள் வெளியே வரும்போது, அவர்களை வரவேற்க பா.ஜ., தயாராக இருக்கும். ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளை தொடுப்பது, அறிவாலயம் அரசுக்கு புதிதல்ல. அதேபோல, இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும், பா.ஜ., தொண்டனுக்கு புதிதல்ல.சகோதரர் சூர்யா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். பொய்யான வழக்கு தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று ஸ்டாலின், மம்தா ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்து கொண்டிருக்கிறோம்; பொறுத்து கொண்டிருக்கிறோம்; எங்கள் நேரம் வரை காத்து கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.