ஈரோட்டில், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு:
மலைவாழ் மக்கள் நலச்சங்கம் குணசேகரன்: மலைப்பகுதி மக்களுக்கு, 100 நாள் வேலை திட்டம் மூலம் மட்டுமே வேலை கிடைக்கிறது. மலைப்பகுதியில் பட்டா நிலம் வைத்திருப்போர், கல்வரப்பு அமைக்க அனுமதித்தால், இவர்களுக்கு வேலை கிடைக்கும். சுண்டப்பூர் - பர்கூர் வரையில், 4 கி.மீ., சாலை அமைக்கும் திட்டம், வனத்துறை அனுமதி மறுப்பால் கைவிடப்பட்டது. மீண்டும் அத்திட்டத்தை நிறைவேற்ற
வேண்டும்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு: உரங்கள் மீதான, 5 சதவீத வரி, பூச்சி கொல்லி மருந்து மீதான, 18 சதவீத வரியை நீக்க வேண்டும்.
கரும்பு டன், 4,000 ரூபாய், நெல் ஒரு கிலோ, 30 ரூபாய், மஞ்சள் குவிண்டால், 11 ஆயிரம் ரூபாய் என அரசு விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் துார்வார வேண்டும். உயர் மின் கோபுரத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர
வேண்டும்.
சின்னபுலியூர், பெரியபுலியூர், வைரமங்கலம், எலவமலைபகுதி விவசாயிகள், குடியிருப்போர் நலக்கூட்டமைப்பு பொறுப்பாளர் ராமசாமி: சின்னபுலியூர் பஞ்., பகுதியில் செயல்படும் தனியார் எரிசாராய தொழிற்சாலை கழிவு, ஓடை மூலம் பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர், குடிநீர், காற்றும் பாதிக்கிறது. அந்த ஆலைக்கு தடை விதிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி: ஈரோடு - கோபி நான்கு வழிச்சாலைக்காக கைப்பற்றப்பட்ட நிலத்துக்கு, உரியவர்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி: பவானிசாகர் அணையில் போதிய அளவு நீர் உள்ளதால், ஆக.,15ல் கீழ்பவானியில் தண்ணீர் திறப்பதற்கு பதில், ஆக.,1ல் தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.