ஈரோட்டில் மளிகை கடை வாசலில், கணவன் மற்றும் மகன் கண்ணெதிரே, பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை, மர்ம ஆசாமி பறித்துச் சென்றான்.
ஈரோடு, சங்கு நகரை சேர்ந்த அயுப் பாட்சா மனைவி குல்சாரா, 45; இவர்களின் மகன் சதாம் உசேன். இவர்களுக்கு சொந்தமான டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:15 மணி அளவில், வீட்டுக்கு செல்வதற்காக பொருட்களை கடைக்குள் எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்கு வந்த ஒரு வாலிபர், தோசை மாவு கேட்டார். அயுப் பாட்சா மாவை எடுத்து வர உள்ளே சென்றபோது, சதாம் உசேன் கடைக்குள் நின்றிருந்தார். கடைக்கு வெளியே குல்சாரா நின்றிருந்தார். அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஆசாமி ஓட்டம் பிடித்தான். சிறிது துாரத்தில் ெஹல்மெட் அணிந்து பைக்கில் தயாராக இருந்த வாலிபருடன் ஏறிச் சென்று விட்டான். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல் ஈரோடு, சூளை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி அம்சா, 37; நேற்று முன்தினம் இரவில் கடைக்கு சாலையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார்
விசாரிக்கின்றனர்.