நாம் தமிழர் கட்சி நிர்வாகியை, வடமாநில கும்பல் தாக்கியதை கண்டித்து, சென்னிமலை அருகே மக்கள், மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் உள்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை அருகே, ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில், காவிரி குடிநீர் குழாயில் செல்கிறது. இங்கு அப்பகுதியில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் குடிநீர் பிடிக்கின்றனர். ஈங்கூர், நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். நாம் தமிழர் கட்சி பெருந்துறை தொகுதி செயலாளர்.
நேற்று காலை குடிநீர் குழாயில், லோகநாதன் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது வட மாநிலத்தை சேர்ந்த சினேகலதா மாலிக் உள்ளிட்ட பெண்கள் வந்தனர். லோகநாதன் குடத்தை எடுத்து விட்டு தண்ணீர் பிடிக்கவே, இருதரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ரது மாலிக், கீதா மாலிக் உள்ளிட்டோருடன் சேர்ந்து சினேகலதா மாலிக், லோகநாதனை தாக்கியுள்ளார். காயமடைந்த அவர், தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஆண்கள், பெண்கள் என, 200-க்கும் மேற்பட்டோர் சென்றனர். வடமாநில தொழிலாளர்களை கண்டித்து, ஈங்கூர் -நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெருந்துறை ஏ.டி.எஸ்.பி., கவுதம் கோயல், சென்னிமலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'வட மாநிலத்தவர்கள் இப்பகுதியில் கடை வைத்து நடத்தக்கூடாது. அவர்கள் வைத்துள்ள கடைகளை காலி செய்ய வேண்டும்' என்று, மக்கள் குற்றம் சாட்டினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர். இதனால் சென்னிமலை-பெருந்துறை பிரதான சாலையில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
லோகநாதன் புகாரின்படி வழக்குப்பதிந்த சென்னிமலை போலீசார், ரது மாலிக், 32; இவரின் மனைவி கீதா மாலிக், 29;, சகோதரி சினேகலதா மாலிக், 29; ஆகியோரை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.