''மாணவர்கள் கல்வி கற்கும்போதே, வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பது குறித்து பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் பொன்முடி கூறினார்.
சேலம் பெரியார் பல்கலையில், கலைஞர் ஆய்வு மையம் சார்பில், சிறப்பு பொழிவரங்கம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:
நடப்பாண்டு பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் கல்வி கற்கும்போதே, வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பது குறித்து பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம், 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியானதும், அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க, 5 நாள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலையில் துறை தலைவர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவதில்லை என புகார் எழுந்தது.
அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், தமிழக அரசு, 'சமூக நீதி கண்காணிப்பு குழு' அமைத்துள்ளது. அதன் தலைவர், விரைவில் அனைத்து பல்கலை, கல்லுாரிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உடனிருந்தனர்.