போக்குவரத்து கழகங்களில் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையால், பஸ்களை இயக்க பழுதுபார்ப்பு பணியில் உதவி பொறியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 325 பணிமனை மூலம், 22 ஆயிரத்து, 125 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.35 லட்சம் பேர் ஈடுபட்ட நிலையில், தற்போது, 85 ஆயிரத்து, 150 பேர் மட்டும் உள்ளனர்.
கடந்த மே, 30ல், 1,200 பேர் ஓய்வு பெற்ற நிலையில், ஜூன், 30ல், 1,450 பேர் ஓய்வு பெற உள்ளனர். இதனால், தமிழகம் முழுதும், 2,000க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.
தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையால் சிறு அளவில் ஏற்படும் பழுதை கூட சரி செய்யாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
வேறு வழியின்றி, செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர்கள், டயரை கழற்றி மாற்றுதல், பல்புகளை எரிய விடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'ஜூலை, ஆகஸ்டில் இயக்கத்தில் உள்ள பஸ்களில், 20 சதவீதம் ஆட்களின்றி ஓரங்கட்டப்படும். பஸ்களை தடையின்றி இயக்க அனைத்து கோட்டங்களுக்கும் தேவையான ஊழியர்களை உடனே பணி அமர்த்த வேண்டும்' என்றனர்.