''பன்னீர்செல்வம் - பழனிசாமி நேரடி பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
'அக்னிபத்' திட்டம், எதிர்கால இளைஞர்களுக்கு எதிரானது என்றாலும், இனி வரும் தேர்தல் கருதி, இளைஞர்களை ஈர்க்கும்படி, பா.ஜ., செயல்படுகிறது. தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகர் பகுதிகளில், வரும், 27ல், 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து, காங்., போராட்டம் நடத்த உள்ளது.
தற்போது, அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேரடி பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைந்து, கட்சியை வழிநடத்த வேண்டும். மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் சூழல் அனைவரும் அறிந்தது. அதற்கு மத்திய அரசு தான் காரணம்.
ராஜிவ் கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினியையும் விடுவிக்க வேண்டும் என்பதில், காங்., கட்சிக்கு ஆட்சேபனை கிடையாது. அத்துடன் குண்டு வெடிப்பில் சிறையில் உள்ளவர்களையும் விடுவிக்க, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் குற்ற சம்பவங்களை குறைக்க, போலீசார் நடவடிக்கை தேவை. குறிப்பாக, 'லாக்கப்' மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.