திருவண்ணாமலை அருகே, தாய்ப்பால் குடிக்கும்போது பச்சிளம் குழந்தை மூச்சு திணறி பலியானது.
திருவண்ணாமலை, அவலுார்பேட்டை சாலையில் உள்ள ஆண்டாள் நகரை சேர்ந்தவர் விவேகானந்தன், 36; தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சத்யாதேவி, 33. இவர்களுக்கு, இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சத்யாதேவி மீண்டும் கர்ப்பமானார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன், திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு நேற்று முன்தினம் மாலை, சத்யாதேவி தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது, குழந்தைக்கு பால் கொடுக்கும்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.