ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார், கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.தி.மு.க., முதன்மை செயலாளரும், தமிழக அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். உள்ளூர் போலீசார், சி.பி.சி.ஐ.டி., மற்றும் சி.பி.ஐ., மாறி மாறி விசாரித்தும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.
பத்தாண்டுகளுக்கு மேலாகியும் வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் இவ்வழக்கை தமிழக போலீசே விசாரிக்கவும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. துாத்துக்குடி எஸ்.பி.,யாக இருந்த ஜெயக்குமார், டி.எஸ்.பி., மதன், சி.பி.ஐ., டி.எஸ்.பி., ரவி தலைமையிலான போலீஸ் குழுவினர் விசாரித்து வருகின்றனர். துப்பு கொடுப்பவர்களுக்கு, 50 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு எஸ்.ஐ.,க்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு கோவையில் ஒரு வாரம் முகாமிட்டு விசாரித்தது. ராமஜெயம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அத்தொழில் சார்ந்து கொலை நடந்திருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.
கோவை போலீசார் கூறுகையில், '' ராமஜெயம், கோவையில் ஒரு அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவர்களுக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கும் நில விவகாரம் இருந்துள்ளது. போலீஸ் அதிகாரியால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் எதிர்தரப்பினரால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. ராமஜெயம் கொலைக்கு இந்த பகை காரணமா என்று விசாரித்துள்ளனர். அதே போன்று, கோவையிலுள்ள பிரபல மில் ஒன்றின் சொத்தினை ராமஜெயம் தனது நிறுவனத்தின் பெயரில் ஏலம் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இருந்திருக்குமோ என்றும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது' என்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-