மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், முக்கியக் கட்சிகளின் தலைவர்களாகும் சூழ்நிலை உருவாகியிருப்பதால், தமிழக அரசியலில் கொங்கு மண்டலம் முதல் முறையாக கவனம் பெறுகிறது.
சுதந்திரத்திற்குப் பின், தமிழகத்தில் அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, இரு பெரும் திராவிடக் கட்சிகள்தான், அரசியலிலும், ஆட்சியிலும் மாறிமாறி கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் தலைவர்களாகவும், முதல்வர்களாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த காமராசர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாதுரை, திருவாரூரைச் சேர்ந்த கருணாநிதி, கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட எம்.ஜி.ஆர்., ஸ்ரீரங்கத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜெயலலிதா, சென்னையைச் சேர்ந்த ஸ்டாலின் போன்றவர்கள்தான், கட்சிகள் மற்றும் ஆட்சிகளை வழி நடத்தி வந்துள்ளனர்.
அரசியலில் திருப்பம்
தொழில், விவசாயம், கல்வி என பல்வேறு துறைகளிலும் நன்கு வளர்ச்சி பெற்ற கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருமே, தமிழக அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் உச்சத்தில் இருந்ததில்லை. ஜெ.,மறைவுக்குப் பின், திடீரென முதல்வர் பதவிக்கு பழனிசாமி வந்தபோதுதான், அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.அவர் முதல்வரானதை, கொங்கு மண்டலமே கொண்டாடியது. அதற்கேற்ப, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பலரும், அரசின் மிக முக்கியமான துறைகளின் அமைச்சர்களாக பதவி வகித்தனர். அந்த காலகட்டத்தில், அ.தி.மு.க., உடையாமல் காப்பாற்றியதிலும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதிலும், இவர்களின் பங்கு அதிகம் இருந்தது.
அதற்கு முன்பு வரை, சென்னை மண்டலம், டெல்டா மாவட்டங்கள் அல்லது தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, கட்சியிலும், அமைச்சரவையிலும் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. 2016-2021க்கு இடைப்பட்ட நான்கரை ஆண்டுகளில்தான், கொங்கு மண்டல அரசியல்வாதிகளின் கைகள் ஓங்கின. சசிகலா குடும்பத்தையே ஓரம் கட்டி ஒழித்த பெருமையும் இவர்களையே சேர்ந்தது.
கணிப்பு தகர்ப்பு
ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால்தான், இவர்களால் கட்சியைக் காப்பாற்ற முடிகிறது; ஆட்சிக்காலம் முடிந்து விட்டால், எல்லோரும் சிதறிப்போவார்கள்; கொங்கு மண்டலத்தைத் தவிர, வேறெங்கும் பழனிசாமிக்கு ஆதரவு இருக்காது என்றும், மீண்டும் சசிகலா வசமே, அ.தி.மு.க., போகுமென்றே பலரும் கணித்தனர். அந்த கணிப்பு, அ.தி.மு.க., பொதுக்குழுவில் தகர்க்கப்பட்டுள்ளது.கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மேற்கு மாவட்டங்கள் மட்டுமின்றி, வடக்கு மாவட்டங்கள், சென்னை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள், பழனிசாமியை அ.தி.மு.க., பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்தப் பகுதி, இந்த சமுதாயம் என்ற எல்லையை உடைத்து, மாநில அளவிலான தலைவராக பழனிசாமி வென்றுள்ளார்.
புறக்கணிக்க முடியாத சூழல்
இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியதில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களே முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஏற்கனவே, கொங்கு மண்ணைச் சேர்ந்த அண்ணாமலை, பா.ஜ., மாநிலத் தலைவராகி, தமிழக அரசுக்கு 'தண்ணி' காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது பழனிசாமியும் அ.தி.மு.க.,பொதுச் செயலாளராவது உறுதியாகியுள்ளது. தமிழக அரசியலில் கொங்கு மண்டலம் முதல் முறையாக பெரிதும் கவனம் பெற்றுள்ளது. தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சியினரும், இனிமேல் மேற்கு மாவட்டங்களைப் புறக்கணிக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இது எந்தக் கட்சிக்கு, எந்தெந்தப் பகுதிகளில் சாதகமாகவும், பாதகமாகவும் இருக்குமென்பது, அடுத்த லோக்சபா தேர்தலில்தான் தெரியவரும்.
-நமது சிறப்பு நிருபர்-