குன்னூர்;துணி பைகளில் பழங்குடியினரின் ஓவியங்கள் வரைந்து அசத்தும் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.நீலகிரி மாவட்டம், குன்னூர் புதுக்காடு கிராமத்தில், குரும்பர் பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மகளிருக்கு 'அஸ்விடா அறக்கட்டளை' சார்பில், டெய்லரிங், சுவெட்டர் நிட்டிங் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.பிளாஸ்டிக் தடை காரணமாக துணி பைகளை பயன்படுத்துவது மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், துணி பைகளை பழங்குடியினர் தைத்து வருகின்றனர். இதில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்களது பாரம்பரிய பாறை ஓவியங்களை, இந்த துணி பைகளில் வரைந்து, மகளிர் அசத்துகின்றனர்.
தேன் எடுத்தல், இயற்கை வழிபாடு, விவசாயம் உள்ளிட்ட இவர்களின் பாரம்பரிய ஓவியங்கள், இந்த துணி பைகளில் வரையப்பட்டு வருகிறது.பயிற்சியாளர் உஷா கூறுகையில், "தையல் பயிற்சியை பெறும், பழங்குடியினர் தங்களது பாரம்பரிய ஓவியங்களை தைக்கும் துணி பைகளில், எம்ப்ராய்டரி செய்தும், அக்ரலிக் பெயின்ட்டில் ஓவியங்களாக வரைந்தும் வருகின்றனர்," என்றார்.தற்போது, துணி பைகளுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அழகிய ஓவிய வேலைபாடுகள் துணி பைகளை மிகவும் குறுகிய ஒரு அறையில் பைகளை தைத்து, பயிற்சி பெறுகின்றனர். பழங்குடியினருக்கென தனி கூடம் அமைத்து, இந்த பணிகளை அதிகளவில் மேற்கொள்ள அரசு கடனுதவிகள் வழங்கி, விற்பனை செய்ய, நடவடிக்கை எடுத்தால், பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்படும்.