விழுப்புரம் : 'முறைகேடுகள், ஊழல்கள் இன்றி நிர்வாகம் நடைபெற முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் தி.மு.க., ஆட்சி நீடிக்காது' என பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் பேசினார்.விழுப்புரத்தில், பா.ஜ., மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர்கள் பாண்டியன், ஜெயக்குமார், சத்யநாராயணன் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் சுகுமார், நகர தலைவர் வடிவேல் பழனி, ஊராட்சி தலைவர் சுந்தரராஜன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் தாஸசத்யன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் பேசியதாவது:ஜனாதிபதி தேர்தலில், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க., அதனை நிரூபிக்க வேண்டும் என்றால், பா.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும்.
ஏற்கனவே இஸ்லாமிய சமூதாயத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் 2வது முறையாக ஜனாதிபதியாக வரக்கூடிய வாய்ப்பை தி.மு.க., தடுத்து நிறுத்தி விட்டது.பழங்குடியின வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தி.மு.க. தலைவர் முன்வர வேண்டும். அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை பழனிசாமி, பன்னீர் செல்வம் என இரு தரப்பினரிடமும் ஆதரவு கேட்டுள்ளோம்.தமிழகத்தில் கடந்த ஓராண்டில் தி.மு.க., ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்துள்ளதாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. போலி வாக்குறுதிகள் அளித்து தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது.முறைகேடுகள், ஊழல்கள் இன்றி நிர்வாகம் நடைபெற முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தி.மு.க., ஆட்சி நீடிக்காது.இவ்வாறு ஆதவன் கூறினார்.