சென்னை: தமிழகம் முழுதும், எஸ்.ஐ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
காவல் துறைக்கான ஒதுக்கீட்டுக்கு, இன்று தனித்தேர்வு நடைபெற உள்ளது.தமிழக காவல் துறையில், 444 உதவி ஆய்வாளர்கள் என்ற, எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்ய, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மார்ச் 8ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆண், பெண்கள், திருநங்கையர் என, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக சென்னையில் 11 மையங்கள் உட்பட, மாநிலம் முழுதும் 39 மையங்களில், 197 அறைகளில் நேற்று எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை, 2 லட்சத்து, 21 ஆயிரத்து 213 பேர் எழுதினர். சென்னையில், 7,080 ஆண்கள்; 1,506 பெண்கள் என, 8,586 பேர் எழுதினர். பலத்த சோதனைக்கு பின், தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு கண்காணிப்பு பணியில், போலீஸ் உயரதிகாரிகள் ஈடுபட்டனர்.
'சிசிடிவி' கேமரா வாயிலாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து, மாநிலம் முழுதும் நடந்த தேர்வு கண்காணிக்கப்பட்டது.'மொபைல் போன், கால்குலேட்டர்' போன்ற மின்னணு சாதனங்கள், மையங்களுக்கு எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீட்டு அடிப்படையில், இன்று தனித்தேர்வு நடைபெற உள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் போன்ற உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். இறுதியாக, நேர்முக தேர்வு அடிப்படையில், எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.