சென்னை: மழை சீசன் துவங்கும் முன், சேதமடைந்த சேமிப்பு கிடங்குகளை சீரமைக்கும் பணியை முடுக்கி விடுமாறு, தமிழக அரசுக்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, 130 கோடி கிலோ கொள்ளளவில், 260 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அவற்றில் ரேஷன் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு சொந்தமான, 76 கோடி கிலோ கொள்ளளவு உடைய, 60 கிடங்குகளை, பல்வேறு அரசு நிறுவனங்கள், வியாபாரிகள், கூட்டுறவு சங்கங்கள் வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றன.
இது தவிர, கூட்டுறவு சங்கங்களுக்கும், மாவட்டங்கள் தோறும் கிடங்குகள் உள்ளன. அவற்றிலும் ரேஷன் பொருட்கள், வேளாண் விளை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கிடங்குகளில் மேற்கூரை போன்றவை சேதமடைந்து இருப்பதால், மழை தண்ணீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கிடங்குகளில் சுமை துாக்கும் ஊழியர்கள் கூறியதாவது:முறையான பராமரிப்பு இல்லாததால், பல கிடங்குகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு இருப்பதுடன், மேற்கூரைகளிலும் ஓட்டைகள் காணப்படுகின்றன. இதனால் மழை பெய்யும் போது, மழை தண்ணீர் கிடங்குகளுக்குள் புகுந்து, தானிய மூட்டைகள் மேல் விழுகின்றன.
மேலும், கிடங்குகளில் சரிவர துாய்மை பணி செய்யப்படாததால் எலி, கரப்பான் பூச்சி போன்றவை மூட்டைகளை கடித்து பாழாக்குகின்றன. அக்., மாதம் வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்குகிறது. அதற்கு முன்னதாக, சேதமடைந்த கிடங்குகளில் சீரமைப்பு பணிகளை, அரசு முடுக்கி விட வேண்டும். அந்த பணிகள் முறையாக நடந்துள்ளனவா என்பதை, தனி குழு அனுப்பி ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.