வாடிப்பட்டி:'ஆன்லைன்' விளையாட்டிற்கு, தன் வீட்டிலேயே 52 சவரன் நகைகளை திருடிய பள்ளி மாணவர் உட்பட மூவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'ஆன்லைன்' விளையாட்டுக்கு அடிமையாகும் மாணவர்களின் போக்கை மாற்றியமைக்க, பள்ளிக் கல்வித் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை பல்கலை நகர் பகுதி ஓட்டல் உரிமையாளர் ஒருவரின் மகன், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். சில நாட்களுக்கு முன், உரிமையாளர் மனைவி கழற்றி வைத்திருந்த நகைகள் காணாமல் போயின. மகனிடம் விசாரித்ததில், அவ்வப்போது திருடியதை ஒப்புக் கொண்டார்.
மூன்று மாதங்களாக அம்மாணவர், சிறிது சிறிதாக வீட்டில் 52 சவரன் நகைகளை திருடி, ஆன்லைன் விளையாட்டான 'பிரீ பயர்' விளையாட்டுக்கு 'ரீசார்ஜ்' செய்ய, 'கேம் பாயின்ட்' வாங்க என, சக மாணவர் மூலம் அறிமுகமான, மதுரை, கோச்சடையைச் சேர்ந்த, 17 வயது மாணவரிடம் கொடுத்துள்ளார்.மூன்று மாணவர்களிடமும், சமயநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம், மதுரை மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கின்போது போன் மூலம் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மாணவர்கள், ஊடாக அதில் பதிவிறக்கம் செய்து விளையாடும் விளையாட்டுகளுக்கும் அடிமையாகி விட்டனர்.இந்த போக்கிலிருந்து அவர்களை மீட்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.