'லிங்க் எக்ஸ்பிரஸ்' ரத்து: துாத்துக்குடி பயணிகள் துாக்கம் 'கட்!' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'லிங்க் எக்ஸ்பிரஸ்' ரத்து: துாத்துக்குடி பயணிகள் துாக்கம் 'கட்!'
Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 

கோவை - நாகர்கோவில் ரயிலில் துாத்துக்குடிக்கு செல்லும் பயணிகளுக்காக இயக்கப்பட்ட, 'லிங்க் எக்ஸ்பிரஸ்' ரத்து செய்யப்பட்டு, இணைப்பு ரயில் இயக்கப்படவுள்ளதால், நள்ளிரவில் மணியாச்சியில் பல நுாறு பயணிகள் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

துறைமுக நகரமான துாத்துக்குடிக்கும், தொழில் நகரமான கோவைக்கும் இடையே, பல்வேறு தொழில், வணிக, சமூகத் தொடர்புகள் உள்ளன. துாத்துக்குடியைச்சேர்ந்த பல ஆயிரம் மக்கள், கோவையில் வசித்து வருகின்றனர்.கோவையில் இருந்து துாத்துக்குடிக்கு ரயில் இயக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, 2011 ஜூலை 1 முதல், கோவை - நாகர்கோவில் ரயிலில், துாத்துக்குடிக்கு 'லிங்க் எக்ஸ்பிரஸ்' இயக்கப்பட்டது.

ஒரு ஏ.சி., பெட்டி உட்பட ஆறு பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயிலில், பயணிகள் எண்ணிக்கை அதிகமிருந்ததால், ஓராண்டுக்குள் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டது.நாகர்கோவில் செல்லும் வழியில் மணியாச்சி சந்திப்பில், இந்த பெட்டிகளை வேறு ஒரு இன்ஜின் வைத்து, துாத்துக்குடிக்கு இயக்கி வந்தனர். கோவையிலிருந்து தினமும் 600 பேர் வரை இதில் பயணம் செய்தனர். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்படும் நிலையில், 'லிங்க் எக்ஸ்பிரஸ்' ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக, வாஞ்சி மணியாச்சி சந்திப்பிலிருந்து ஜூலை 2 முதல் துாத்துக்குடிக்கு இணைப்பு ரயில், இயக்கப்படவுள்ளது. அதாவது, கோவை - நாகர்கோவில் ரயிலில் செல்வோர், மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி, இந்த ரயிலில் ஏறி மாறிச் செல்ல வேண்டும்.துாத்துக்குடியில் இருந்து கோவைக்கு வர, இணைப்பு ரயிலில் வந்து இறங்கி, இரவு 11:30 மணிக்கு மணியாச்சியில் ஏற வேண்டும்;

அதே போன்று, கோவையிலிருந்து போகும்போது, அதிகாலை 2:40 மணிக்கு மணியாச்சியில் இறங்கி, இணைப்பு ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் போகும்போதும், வரும்போதும் துாங்கவே முடியாது.துாத்துக்குடி இணைப்பு ரயிலில், முன் பதிவில்லாத பெட்டியில், 300 பேர் வரை டிக்கெட் எடுத்து ஏறி வந்து, கோவை ரயிலில் இடம் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் அதிகம். இதனால் 'லிங்க் எக்ஸ்பிரஸ்' ரயில் ரத்து மற்றும் இணைப்பு ரயில் பற்றிய அறிவிப்பு, கோவையிலுள்ள பல ஆயிரம் துாத்துக்குடி மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.கோவையில் இருந்து துாத்துக்குடிக்கு தனி ரயில் இயக்க வேண்டும்; அதுவரை, பயணிகளை துாத்துக்குடியில் ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என, துாத்துக்குடி பயணிகள் நலச்சங்கம், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பியுள்ளது. இரண்டும் நடக்காவிட்டால், கோவை மற்றும் துாத்துக்குடியில் உள்ள பல்வேறு வணிக, சமூக அமைப்புகளும் களமிறங்கிப் போராடத் தயாராகி வருகின்றன.




தெற்கு ரயில்வே பாரபட்சம்

தமிழகத்துக்கு ஒரு மாதிரியாகவும், கேரளாவுக்கு ஒரு மாதிரியாகவும் பாரபட்சத்துடன் தெற்கு ரயில்வே நிர்வாகம் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், திருவனந்தபுரம் - நிலம்பூர் ராஜாராணி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரே ரயிலாக இயக்கப்பட்டு, சொர்ணுாரில் இருந்து பெட்டிகளைப் பிரித்து, ஒரு ரயில் பாலக்காடுக்கும், மற்றொரு ரயில் நிலம்பூருக்கும் தனித்தனியாக இயக்கப்பட்டது.

இந்த ரயில்கள், கொரோனாவுக்கு முன்பே, தனித்தனி ரயில்களாக மாற்றி இயக்கப்படுகின்றன. அதிலும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், தற்போது மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, தெற்கு ரயில்வேயில் இருந்து பிரிந்த தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே ஆகியவற்றில், இப்போதும் 'லிங்க்' ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்த ரயில்களை இயக்க மறுப்பது, தெற்கு ரயில்வே அதிகாரிகளின் பாரபட்சமான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X