சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சட்ட விரோத கழிவு நீர் இணைப்புகளை துண்டிக்க, அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், மாநகர் முழுதும் அதிரடி சோதனை நடத்தி, மூன்று நாட்களில், 274 ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். 66 இடங்களில் சட்டவிரோத கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதில், சில பொறியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் பல்வேறு வகைகளில் சமரசம் அடைந்ததால், மாநகராட்சியின் திறந்தவெளி நிலங்கள், தெருக்கள், சாலையோர பகுதிகள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டன.அதே போல், வடிகால்களில் கழிவு நீர் இணைப்பும் அதிகரித்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சட்டவிரோத கழிவு நீர் இணைப்புகளை துண்டித்து, அவற்றை நிரந்தரமாக அடைக்க, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சமீபத்தில் பறக்கும் படை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
மண்டல செயற்பொறியாளர்கள் தலைமையில், ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு இளநிலை பொறியாளர், ஒரு மின்துறை உதவி பொறியாளர், 10 சாலை பணியாளர்கள், 5 மலேரியா ஒழிப்பு பணி ஊழியர்கள் ஆகியோர், பறக்கும் படை குழுவில் இடம் பெற்றனர்.கட்டட கழிவுகளை அகற்ற, ஒரு ஜே.சி.பி., ஒரு பாப்காட் இயந்திரம், ஒரு லாரி, ஒரு மினி வேன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படை குழு, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில், ரோந்து பணியில் ஈடுபடுவர்.
அப்போது, மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், சாலையோரம் கொட்டிய கட்டட கழிவுகள் மற்றும் வடிகாலில் இணைக்கப்பட்ட கழிவு நீர் இணைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் படி, முதற்கட்டமாக இம்மாதம் 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பறக்கும் படை ரோந்துப் பணி நடைபெற்றது.மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மொத்தம், 274 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அவை முழுவதும் அகற்றப்பட்டது.
மொத்தம், 1 லட்சத்து, 75 ஆயிரம் கிலோ கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.மேலும், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்ட, 66 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படையினர் தொடர்ந்து இது போன்ற அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, மாநகராட்சி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மாநகராட்சி அதிகாரிகள்.
மாநகராட்சிக்கு சொந்தமான இடம், தெரு, சாலையோர ஆக்கிரமிப்பால் தினமும் பல வகைகளில் பாதிக்கப்படுவதாக, பொதுமக்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, பறக்கும் படை அமைக்கப்பட்டது. கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் செயல்பட, பறக்கும் படை குழுவுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. யாராவது குறுக்கீடு செய்தால், மாநகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாரம் மூன்று நாட்கள் அதிரடி நடவடிக்கை தொடரும்.