சென்னை:சென்ட்ரலில் உள்ள பூங்கா செயற்கை நீரூற்று, முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் துர்நாற்றம் வீசுகிறது
.சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் ரயில் நிலையம், விக்டோரியாஹால், மெட்ரோ நிலையத்திற்கு இடைப்பட்ட இடத்தில், மத்திய சதுக்க திட்டத்தின் கீழ், 12.49 கோடி ரூபாய் செலவில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.பூங்காவில், அழகு செடிகள், புல்வெளி, அலங்கார மின் விளக்குகளுடன் கூடியே செயற்கை நீரூற்றுகள், நடைபாதைகளில் நிழற்குடைகளுடன், பயணியருக்கு கிரானைட் இருக்கைகளும் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாண்டு, மார்ச் 31ல், இப்பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று வண்ண விளக்குகளுடன் ஜொலித்தது. ஆனால், இது ஒரு மாதம் மட்டுமே. அதன்பின், தண்ணீர் வசதி நிறுத்தப்பட்டது.
மேலும், நீரூற்று தொடர்பான இயந்திர கோளாறால் பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.நீரூற்று அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் தேங்கியுள்ள தண்ணீரில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், 'ஏடிஸ்' உள்ளிட்ட கொசு உற்பத்தி அதிகரித்து மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை.பல கோடி செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று, ஓரிரு மாதம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, பல்வேறு சந்தேகங்களை வலுக்கிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.