தாம்பரம்:உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி, பள்ளி மாணவ -- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, சிட்லபாக்கத்தில் நடைபெற்றது.
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில், லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தின விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. 'உலகின் விடியல்' அறக்கட்டளை நிறுவனர் லஷ்மி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதில், பள்ளி மாணவ -- மாணவியர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களுடன், விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பேரணியை தொடர்ந்து, மாணவர்களுக்கு புவி வெப்பமயமாதல், காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், நீர்நிலைகள் மாசுபடுவது, தண்ணீர் பிரச்னை, மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, விழாவிற்கு வந்த பெற்றோருக்கு, 'பசுமை வாசல்' அறக்கட்டளை சார்பில், மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.