திருப்பூர்:தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, 50 டன் கடல் மீன்கள் வரும் நிலையில், மீன்பிடி தடைகாலம் காரணமாக மீன் வரத்து வெகுவாக குறைந்தது. கடந்த, 14 ம் தேதி தடைகாலம் நிறைவு பெற்றாலும், முந்தைய வாரம் குறைந்தளவு கடல்மீன்களே வந்திருந்தது; நேற்று நிலை மாறியது.பத்து நாட்களாக மீனவர்கள் கடலுக்கு சென்று அதிகளவில் மீன்களை கொண்டு வந்ததால், மீன் வரத்து அதிகரித்தது. கடந்த வாரம், 20 டன் கடல் மீன்கள் மட்டுமே வந்த நிலையில், நேற்று, 40 டன் வந்தது. கடந்த வாரம், அணை மீன்களுடன் சேர்த்து 35 டன் மட்டுமே வந்தது; நேற்று, மொத்த வரத்து, 60 டன்னாக உயர்ந்தது.பாறை மீன் கிலோ, 180, சங்கரா, 250, அயிலை, 300, வஞ்சிரம், 650, மத்தி, 130 ரூபாய், கிழங்கா, 150, பெரிய நெத்திலி, 220 ரூபாய். சிறியது, 120 ரூபாய்க்கு விற்றது. நண்டு, 350 முதல், 450 ரூபாய் வரை விலை போனது. கடந்த வாரத்தை விட மீன்கள் அதிகளவில் வந்த நிலையில், அசைவ பிரியர்கள் அதிகளவில் மீன் வாங்க வந்திருந்தனர்.மீன் வியாபாரிகள் கூறுகையில்,' இரண்டரை மாதங்களுக்கு பின் தற்போது தான் மீன் வரத்து இயல்பாகியுள்ளது. வரத்து அதிகரிப்பால், மொத்த வியாபாரிகள் அதிகளவில் மீன்களை விற்பனை செய்ய வாங்கிச் சென்றனர். வரும் வாரங்களில் மீன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது,' என்றனர்.