புதுச்சேரி : பொய் செய்திகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை தி.மு.க, நிறுத்திக் கொள்ளவேண்டும் என அ.தி.மு.க.,கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:புதுச்சேரி வந்த மத்திய உள்துறை அமைச்சருடன் நடந்த சீராய்வு கூட்டத்தில், தற்போது மத்திய அரசிடம் உள்ள அரசு நிலம் விற்பனை மற்றும் குத்தகை விடும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என ஆலோசிக்கப் பட்டது. ஆனால், இது பற்றி சரியான புரிதலின்றி, நில அதிகாரம் கவர்னருக்கு வழங்கினால் தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவித்துள்ளார். கடந்த 1973ம் ஆண்டுக்கு பின், நில விற்பனை அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. அரசு நிலத்தை 19 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு விட முடியும்.
புதுச்சேரியில் மாநில அரசு என்றால், சட்டப்படி கவர்னர்தான் தலைமை நிர்வாகி ஆவார். மத்திய அரசிடம் உள்ள அரசு நில விற்பனை, குத்தகை விடும் அதிகாரத்தை, புதுச்சேரி முதல்வர், மாநில அரசுக்கு கேட்கிறார்.இந்த அதிகாரம் ஏதோ மாநில அரசிடம் உள்ளது போலவும், அதை மத்திய அரசு எடுத்து கவர்னரிடம் ஒப்படைப்பது போன்ற தவறான கருத்தை தி.மு.க., மக்கள் மத்தியில் பரப்பி உள்ளது.
மாநில நில உரிமை சம்பந்தமான சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை நமக்கு வழங்க வேண்டும்.டில்லியில் உள்ளது போல், மத்திய அரசு, மாநில அரசுக்கு நில அதிகாரம் வழங்கினால், அதை மாநில நிர்வாகியான கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டே வழங்கப்படும். நமது மாநிலத்திற்கு அதிகாரம் வேண்டும் என்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து அதிகாரம் தரப்படுவதை எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. பொய் செய்திகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை தி.மு.க., நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.