குழாய் உடைப்பை சரிசெய்யாததால், பல்லக்காபாளையம் பகுதி மக்கள், ஒரு கிலோமீட்டர் துாரம் சென்று, தண்ணீர் எடுக்கும் அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், குட்டிக்கிணத்துார் பெருமாள்கோவில் காடு பகுதியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எலந்தகுட்டை ஊராட்சி பகுதிக்கு சென்று, இப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல நாட்கள் ஆகியும் இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் ஒரு கி.மீட்டர் துாரம் வேறு ஊருக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களும், எங்கள் பகுதிக்கு தண்ணீர் பிடிக்க வராதீர்கள் என்று திட்டுகின்றனர். ஆகையால், மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, எங்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.