கடலில் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் முடிந்ததால் மீன்கள் விலை சரியத்தொடங்கியுள்ளது.
கடல்களில் மீன்வளத்தை பெருக்க, மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஏப்., 15 முதல் ஜூன், 14 வரை தடை அமலில் இருந்தது. இதனால் விசை, இழுவை படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறு ரக நாட்டு படகு, பைபர் படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்கள் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதனால், சேலத்தில் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள மீன் மார்க்கெட், நான்கு ரோடு, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதி
களுக்கு, மீன்கள் வரத்து குறைந்து, 30 சதவீதம் தான் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதனால், மீன்கள் விலை, 30 முதல், 40 சதவீதம் வரை விலை உயர்ந்தது. தற்போது தடை காலம் முடிந்து, மீன்கள் வரத்தொடங்கியதால் விலை சற்று குறைந்துள்ளது. அதற்கேற்ப, வாடிக்கையாளர்கள் கூட்டம், சேலத்தில் உள்ள மீன் கடைகளில் நேற்று அதிகரித்து காணப்பட்டது.
கடந்த மாதம் கிலோ, வஞ்சிரம் சிறியது, 600 முதல், 800க்கு விற்றது, தற்போது, 550 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், பாறை, 550ல் இருந்து, 450, இறால், 600ல் இருந்து, 550, சங்கரா, 450ல் இருந்து, 420, நெத்திலி, 500ல் இருந்து, 250, மத்தி, 220ல் இருந்து 180 என, விலை குறைந்தது. சாலமீன், ஊளி மீன் வரத்து இல்லை. அதேநேரம், கேரளாவில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ளது. அந்த மாநில மக்கள், மீனை அதிகம் விரும்புவர். இதனால் அங்குள்ள வியாபாரிகள் கூட, தமிழகத்தில் முகாமிட்டு கடல் மீன்களை வாங்க தொடங்கியுள்ளனர்.