திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரையில், 'சிட்கோ' ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாக அலுவலகம் மற்றும் பொது சேவைகள் மையத்தை, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், நேற்று திறந்தார். இப்பூங்காவால், 3,000 பேருக்கு வேலை கிடைக்கும் என, சிட்கோ நிர்வாகத்தினர் கூறினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாநில தலைநகர் சென்னையை ஒட்டியுள்ளது. இதனால் தொழில் வளம், இப்பகுதியை நாடி வருவோருக்கு வேலைவாய்ப்புகள், கல்வி என, இந்த மாவட்டம் வளர்ச்சி பெறுகிறது.தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் பொதுத்துறை நிறுவனமான, 'சிட்கோ' எனப்படும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில்நுட்ப ஜவுளி பூங்கா ஏற்படுத்த முடிவெடுத்தது.இதற்கான இட தேவைக்கு ஆய்வு செய்தபோது, திருக்கழுக்குன்றம் அடுத்த, தண்டரை பகுதியில், இதற்கேற்ப இடம் இருந்ததை அறிந்து, 44.3 ஏக்கர் நிலத்தை, அரசிடமிருந்து நிறுவனம் வாங்கியது.தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்பு திட்டம் இரண்டின் கீழ், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவை, ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகமை உதவியுடன், 2018ல் துவக்கியது.
தொழில் முனைவோர் சேவைகளுக்காக, நிர்வாக அலுவலகம், கூட்டரங்கம், மருந்தகம், வங்கி, உணவகம் உள்ளிட்ட பொது சேவைகள் மைய கட்டடம், 2.22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக, 'சிட்கோ' நிறுவன ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்கா, செங்கல்பட்டு மாவட்டம், தண்டரை பகுதியில் துவக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின், இம்மையத்தை, காணொலி மூலம், நேற்று திறந்தார். தண்டரை பகுதியில் நடந்த நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், தொழில் பூங்கா கிளை மேலாளர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்போரூர் அடுத்த, ஆலத்துார் தொழில் வளாக பகுதியில், 115.07 கோடி ரூபாய் மதிப்பில், 67.96 ஏக்கர் பரப்பில், 192 மனைகள் அமைந்த இரண்டாம் பிரிவையும், முதல்வர் துவக்கினார்.முதல் மற்றும் இரண்டாம் பிரிவில், நிறுவனங்கள் ஆலை அமைக்க வரவேண்டும் என, அரசு அழைப்பு விடுத்துள்ளது.வேலைவாய்ப்பு
தனியார் தொழில் நிறுவனங்கள், மூன்று மாதங்களில் தொழில் துவங்கும் என எதிர்பார்க்கிறோம். அனைத்து நிறுவனங்களும் முழுமையாக செயல்படும்போது, நேரடியாக 2,000 பேர், மறைமுகமாக 1,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இப்பகுதியில் தொழில் வளர்ச்சியடைந்து, முன்னேற்றம் ஏற்படும்.- சிட்கோ நிர்வாகத்தினர்