திருப்பூர்: திருப்பூரில், கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், திருமுருகன்பூண்டி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நாகராஜ், 41; அவிநாசி ரோட்டில் அலமாரி, டேபிள், சேர் உள்ளிட்ட பழைய பொருட்களை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிய நாகராஜ், கடைக்குள் துாங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது, கடையின் வெளியே எரிந்து கருகிய சுவடு இருந்தது.துணை கமிஷனர் அபினவ் குமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.இரவு, 11:50 மணியளவில் டூவீலரில் வந்த ஒருவர், 'பீர்' பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, கடை முன் வீசினார்;
அது தீப்பிடிக்காததால், பாட்டிலை கடை முன் உடைத்தார். வெளியேறிய பெட்ரோல் மீது, தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பியது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.சம்பந்தப்பட்ட நபர், திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனியை சேர்ந்த சுபாஷ், 30 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், 'நாகராஜிடம் பணம் கேட்டு. சுபாஷ் மிரட்டியுள்ளார். அவர் கொடுக்க மறுத்துள்ளார். நாகராஜை பயமுறுத்தவே, இதை செய்ததாக சுபாஷ் கூறுகிறார்; தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.