கோவை: கோடிக்கணக்கான ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டத்துக்கான உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், கட்டண விபரத்தை கேட்கும் பொதுமக்கள், இணைப்பு பெற தயங்குகின்றனர். ஆகவே, வேறு வழியின்றி கட்டணம் மற்றும் டிபாசிட் தொகையை, தவணை முறையில் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை பழைய மாநகராட்சி பகுதிகளில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்படுகிறது. குறிச்சி, குனியமுத்துார் பகுதிகளுக்கு பிரத்யேகமாக இத்திட்டம் வகுக்கப்பட்டு குழாய் பதித்தல், தொட்டி கட்டுதல், நீருந்து நிலையம், சுத்திகரிப்பு மையம் கட்டும் பணி நடந்து வருகிறது.பாதாள சாக்கடை இணைப்பு பெற, வருடாந்திர சேவை கட்டணம், வைப்புத்தொகை ஆகியவை, சொத்து வரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரூ.501-1,000 வரி செலுத்துபவராக இருந்தால், வருடாந்திர கட்டணம் ரூ.3,200 மற்றும் வைப்புத்தொகை ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இத்தொகை, சொத்து வரிக்கேற்ப மாறுபடுகிறது. சொத்து வரி ரூ.1,001-5,000 வரை செலுத்துபவராக இருந்தால், வருடாந்திர கட்டணம் ரூ.8,000, டெபாசிட் ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டும்.பொதுமக்களின் ஆட்சேபனையை பொருட்படுத்தாமல், கடந்த மாமன்ற கூட்டத்தில், சொத்து வரியை உயர்த்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
அதன்படி, உயர்த்தப்பட்ட சொத்து வரி, ஜூலை முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதன் அடிப்படையில் கணக்கிட்டால், பாதாள சாக்கடை கட்டணம் மிக அதிகமாக செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பதால், வீட்டின் உரிமையாளர்கள் இணைப்பு பெற முன்வருவதில்லை.
மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை. அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்க முடியாததால், பல கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை, முழு திறனுக்கு செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல், மாநகராட்சி தவிக்கிறது. இதன் காரணமாக, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணவும், வருவாயை பெருக்கவும் அனைத்து கட்டடங்களுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி, வைப்புத்தொகை, இணைப்பு கட்டணம், ரோடு சீரமைப்பு கட்டணம் ஆகியவற்றை ஒரே தவணை அல்லது, 10 தவணைகளில் வசூலிக்கவும், வருடாந்திர சேவை கட்டணத்தை ஒரே தவணை அல்லது, இரு மாதத்துக்கு ஒரு முறை, 6 தவணைகளில் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மாமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க, தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.