சத்தியமங்கலத்தில் ஏலச்சீட்டு நடத்தி, இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர்.
சத்தியமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த தேவராஜ் மனைவி மயிலாத்தாள், 60; இவர் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சத்தியமங்கலம், வடக்குப்பேட்டையை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி தனலட்சுமி, ஏலச்சீட்டு நடத்தினர். ஒரு லட்சம் ரூபாய், 60 ஆயிரம், 50 ஆயிரம் தொகைக்கான மூன்று ஏலச்சீட்டில் சேர்ந்து, மாதந்தோறும், 5,௦௦௦ ரூபாய், 3,௦௦௦ ரூபாய், 2,500 ரூபாய் என, 20 மாதங்களுக்கு செலுத்தினேன். 20 மாத தவணை நிறைவடைந்து ஏலச்சீட்டு தொகையை கேட்டபோது, மகன் படிப்பு செலவுக்கு செலுத்தி விட்டேன். சில நாட்களில் பணம் தருகிறேன் என்றார். அவரது மகன் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அங்கு இரண்டரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதை கடனாக கொடுங்கள் என கூறியதன்பேரில், தனலட்சுமியிடம் தொகையை கொடுத்தேன்.
என்னிடம் மட்டுமின்றி சத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த, 18ல் வீட்டை காலி செய்து கொண்டிருந்தனர். பணத்தை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுங்கள் என கூறியதற்கு, மிரட்டி விட்டு சென்றனர். மோசடி செய்த தனலட்சுமி, பழனிச்சாமி, அவரது மகன்கள் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.