ஈரோடு மாவட்டத்தில் கடந்த பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து, 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்து.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசின் இந்திய உணவு கழகத்தின் நேரடி முகவராக இருந்து, நெல் பயிரிடும் விவசாயிகளிடம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்கிறது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் நெல் பயிரிட்ட விவசாயிகளிடம் இருந்து நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் அரசு கொள்முதல் செய்து வருகிறது.
தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன பகுதியில் மட்டும் ஆண்டுக்கு இரண்டு பருவத்துக்கும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பாசனங்களில் ஒரு பருவத்துக்கு மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனிடையே, இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 12 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து, 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி, நுகர்பொருள் வாணப கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், மூன்று பாசன பகுதிகளில் இருந்து, அரசின் நெல் கொள்முதல் விதிகளின்படி, 90 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். இதன் மூலம், 12 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கான தொகையை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளோம்.
வரும் பருவத்தில் தேவையான இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.