தம்மம்பட்டியில், 'மரச்சிற்பம் கலை கிராமம்' அமைப்பது குறித்து, தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, தம்மம்பட்டியில் உள்ள காந்தி நகரில், மரச்சிற்ப கலை கிராமம் அமைப்பது குறித்து, மரச்சிற்ப கலைஞர்களுடன், தமிழக அரசின் கைத்தறி, துணிநுால் மற்றும் கதர் துறை முதன்மை செயலர் தர்மேந்திரபிரதாப், கைத்திறன் தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் ேஷாபனா, சேலம் கலெக்டர் கார்மேகம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, முதன்மை செயலர் தர்மேந்திரபிரதாப் கூறியதாவது:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மானிய கோரிக்கையின்போது, கைத்தறி, துணிநுால் மற்றும் கதர் துறையின் சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சேலம், தம்மம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், மரச்சிற்ப கைவினை கிராமம் அமைக்கப்படும் என, தமிழக அரசு
அறிவித்தது.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, உலிபுரம், நாகியம்பட்டி, கொண்டையம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், கைவினை குழுவில், 300 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். உள்கட்டமைப்பு வசதி, கொட்டகை, மேம்படுத்தப்பட்ட கருவி, பாதுகாப்பு உபகரணங்கள், சாலை, தெருவிளக்கு, நடைபாதை, உற்பத்தி கூடம், விற்பனை காட்சியகம் மற்றும் வாங்குவோர், விற்பனை செய்வோர் சந்தை என, ஒரு கோடி ரூபாயில் பணி மேற்கொள்ளப்படும்.
தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள பகுதியில், 90 குடும்பங்கள் மரச்சிற்பங்கள் செய்யும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். இந்த மரச்சிற்பம் தொழில்நுட்பமாகவும், மிக நேர்த்தியாகவும் சிறப்பு பெற்றுள்ளதால் வெளிநாட்டினரும் அதிகளவில் வாங்கிச்
செல்கின்றனர்.
இத்தொழிலில் உள்ளவர்கள் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஒற்றிணைத்து மரச்சிற்பம் செய்யவும்,
அதை விற்பனை செய்யும் வகையில், 'தம்மம்பட்டி மரச்சிற்ப கலை கிராமம்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சேலம் தம்மம்பட்டி மரச்சிற்ப கலை
கிராமம் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்து, குடில் அமைத்தும், தொழில் நவீன முறையில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.