ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 94 கோடி ரூபாய் மதிப்பிலான ஜப்தி சொத்துக்களை, ஏலம் விட அனுமதித்து ஏழாண்டு
களாகியும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கவர்ச்சிகர திட்டங்கள் மூலமும், பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகவும் வீட்டுமனை, வீடுகள், ஈமு கோழி வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மரம் வளர்ப்பில் அதிக லாபம் உள்ளிட்ட திட்டங்களை விளம்பரப்படுத்தியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த வழக்குகளை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி நபர்களை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இதில் சில வழக்குகளில் குற்றவாளி
களுக்கு தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
மோசடி செய்தவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை ஏலம் விட்டு, முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், மாவட்டத்தில் நிதி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட, 38 வழக்குகளில், மோசடி தாரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, 94 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து ஏழாண்டுகள் கடந்தும், இதுவரை ஏலம் விடவில்லை. இதை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தான், 'ஒயிட்காலர்' கிரைம் அதிகம் நடக்கிறது. மாவட்டத்தில், 38 மோசடி வழக்குகளில், 94 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கைப்பற்றப்பட்டு, நீதிமன்றம் விற்பனை ஆணை வழங்கி, ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் சுசி ஈமு பார்ம்சின் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான, 28 சொத்துகள்; கிரீன் லைப் பார்ம்ஸ் மற்றும் பவுல்ட்ரியின், 1.78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் அடக்கம். ஏலம் விட அனுமதித்த சொத்துக்களை ஏலம் விடாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த காலங்களில், நீதிமன்றம் அனுமதித்தும் ஏலம் விடாத மூன்று சொத்துக்களை, மோசடி நபர்களே நீதிமன்றம் மூலம் கைப்பற்றினர். அதை மீண்டும் கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
ஈரோடு டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா கூறியதாவது:
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 2019 கால கட்டத்தில் ஏலம் நடந்துள்ளது. கடந்த காலத்தில் எதிர்பார்த்த தொகை கிடைக்காததால் ஏலம் இறுதி செய்யவில்லை. இவ்விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.