மதுரை:வனத்துறை அனுமதிக்கு பின், மேற்கு தொடர்ச்சி மலை ஆலந்துறை ஆற்றுக் கால்வாயில் துார் வாரும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே புதுாரைச் சேர்ந்தவர் ராமராஜா. இவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மேற்கு தொடர்ச்சி மலையில் ஆலந்துறை ஆறு உற்பத்தியாகிறது. இது, ராதாபுரம் பகுதி விவசாயத்திற்கு நீராதாரமாக உள்ளது. நீர்வரத்து கால்வாயில் கற்கள், குப்பை தேங்கியுள்ளன.
இதனால், நீர்வரத்து தடைபட்டு விவசாயம் பாதிக்கிறது. கால்வாயை துார் வாரக் கோரி, தமிழக நீர்வளத் துறை செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.விஜயகுமார் அமர்வு அந்த மனுவை விசாரித்தது.
அரசு தரப்பில், 'அவசரம் கருதி தற்போது ஆட்கள் மூலம் கால்வாயை துார் வாரும் பணி நடக்கிறது. வனத்துறை அனுமதி அளித்ததும் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமல், முழுமையாக பணி மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.