பெரம்பலுார்:அரியலுார் அருகே விமானம் கீழே விழுந்ததாக வதந்தி பரவியதால், மாவட்டம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வங்காரம்- அயன்தத்தனுார்- - அங்கனுார் கிராமத்திற்கு இடையே உள்ள வனப்பகுதியில், நேற்று காலை 11:15 மணிக்கு பயங்கர சப்தம் கேட்டு உள்ளது.வானில் பறந்த விமானம் அங்கு விழுந்து விட்டதாக தகவல் பரவியது. தொடர்ந்து, கிராம மக்கள் வனப்பகுதியில் திரண்டு தேடினர்.
செந்துறை தாசில்தார் துரை, வனத்துறை மற்றும் போலீசார் வனப்பகுதியில் முகாமிட்டு, தேடுதலை தீவிரப்படுத்தினர்.வங்காரம் வனப்பகுதியில், '108' ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. இதனால், விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக, ஆம்புலன்ஸ்கள் வந்துள்ளன என்ற தகவல் காட்டுத்தீயாக பரவியது.
நேற்று மதியம், விமான விபத்து ஏதும் நடைபெறவில்லை; அவ்வாறு வந்த செய்தி வதந்தி என்பது தெரிந்தது.''அரியலுார் மாவட்டம் சமதள பகுதி என்பதால், விமானம் விழுந்திருந்தால் புகை மூட்டம் தெரிந்திருக்கும்,'' என, கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்தார். இதனால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
வதந்தியால், அரியலுார் மாவட்டத்தில் நேற்று காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பரபரப்பு நிலவியது.அரியலுார் அருகே வனப்பகுதியில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடப்பது போல, போலியான படம் சமூக வலைதளங்களில் பரவ விடப்பட்டது. இரண்டு நாட்களாக, பெரம்பலுார், அரியலுார் மாவட்ட கிராம பகுதியில் நான்கு விமானங்கள் சுற்றி வந்துள்ளன. இதுவே, பரபரப்புக்கு காரணம் என தெரிய வந்து உள்ளது.