திருப்பூர்:''கண் நீர் அழுத்த நோய் ஒரு பரம்பரை நோய்; 'அமைதி பார்வை திருடன்' என அழைக்கப்படுகிறது. முன்கூட்டியே டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது''.திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை கண் பரிசோதனை பிரிவு அறை முன்புறம் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில்,' முதல் நிலை கண் நீர் அழுத்த நோயாளிகளின் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு, இந்நோய் வருவதற்கான வாய்ப்பு சாதாரண நிலையில் உள்ள நோயாளிகளை விட, பத்து மடங்கு அதிகம்.கண் நீர் அழுத்த நோய் ஒரு 'அமைதி பார்வைத்திருடன்'. 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் கண்நீர் அழுத்த நோய் இருப்பதை அறியாமலேயே உள்ளனர். கண்நீர் அழுத்த நோயால், இழந்த பார்வையை திரும்ப பெற முடியாது.ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதினால், கண்நீர் அழுத்த நோயினால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க இயலும். எனவே, கண் நீர் அழுத்தத்துக்கான சிகிச்சை பெறுபவர்கள் கண்டிப்பாக தங்களது குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதனைக்கு அழைத்து வர வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அல்லது மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, 2241201 என்ற எண்ணில் அழைக்கலாம்,' என கூறப்பட்டுள்ளது.
டாக்டர்கள் கூறுகையில், 'குறைந்தது ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்கு ஒருமுறையாவது கண்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பலரும் கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல், கண்ணில் நீர்வழிந்து, பிரச்னை சிக்கலாகும் வரை விட்டு விட்டால் பின் பார்வையை மீட்டெடுப்பது சிக்கலாக உள்ளது.கண்ணில் ஏதேனும் தொந்தரவு இருந்தால், உடனடியாக கண் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். கண்நீர் அழுத்த நோய் உள்ளவர்கள் தங்களது உறவினர்களையும் அழைத்து வந்து டாக்டரை ஆலோசித்து கொள்வது நல்லது,' என்றனர்.