திருப்பூர்:நிதியாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்தும், நுண்ணீர் பாசன திட்ட மானிய அறிவிப்பு வெளியாகாததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன், வேளாண்துறை, தோட்டக்கலை பயிர்களுக்கு, நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தமிழகத்தில் இதுவரை, 17.30 லட்சம் ஏக்கர் பரப்பில், நுண்ணீர் பாசன திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 2.50 லட்சம் ஏக்கரில் கட்டமைப்பை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அங்கீகாரம் பெற்ற நுண்ணீர் பாசன நிறுவனங்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு, புதிய விலைப்புள்ளி அடிப்படையில் மானிய தொகை நிர்ணயித்த பிறகு, அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றனர்.