கோவை - பொள்ளாச்சி மாற்றுப்பாதை ரத்து? விறுவிறுப்பாக நடக்கிறது போக்குவரத்து செறிவு கணக்கு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவை - பொள்ளாச்சி மாற்றுப்பாதை ரத்து? விறுவிறுப்பாக நடக்கிறது போக்குவரத்து செறிவு கணக்கு
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 

கோவை-பொள்ளாச்சி மாற்றுப்பாதைத் திட்டத்தைக் கை விடுவது தொடர்பாக, வாகன போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை-பொள்ளாச்சி இடையிலான ரோடு, ரூ.480 கோடி மதிப்பில், மத்திய அரசின் நிதியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு மாற்றுப்பாதை அமைப்பதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டம் வகுக்கப்பட்டது. தற்போதுள்ள ரோட்டுக்கு இணையாக, இந்த ரோட்டிலிருந்து இரண்டு கி.மீ., துாரத்துக்குள் இந்த மாற்றுப்பாதையை அமைக்கவும் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன.பொள்ளாச்சி அருகிலுள்ள கோவில்பாளையத்தில் துவங்கி, கோவை செட்டிபாளையத்தில், பல்லடம்-கொச்சி மாநில நெடுஞ்சாலையில் இணையும் வகையில், உத்தேச மாற்றுப்பாதைத் திட்டம் உருவானது. செட்டிபாளையம், ஒத்தக்கால் மண்டபம், மயிலேறிபாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, கோதவாடி, கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், முள்ளுப்பாடி, கணியாம்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய 11 கிராமங்கள் வழியாக, மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.மொத்தம் 23.7 கி.மீ. துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட இந்த மாற்றுப்பாதைக்காக, இந்த 11 கிராமங்களில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டுமென்று மதிப்பிடப்பட்டது. முதற்கட்டப் பணிகளுக்காக, 62 லட்சத்து 88 ஆயிரத்து 51 ஆயிரம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மாற்றுப்பாதையால், கோவை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.83) போக்குவரத்து நெரிசல் குறையுமென்று, இதற்கான காரணத்தையும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்தது.

தேவையில்லாத திட்டம்

ஆனால், 500 கோடி ரூபாய் செலவழித்து, ஆறு வழிச்சாலைக்கு இணையாக, கோவை-பொள்ளாச்சி ரோடு விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், இந்த மாற்றுப்பாதைக்கான அவசியமென்ன என்ற கேள்வி, அப்போதே எழுந்தது. இந்த மாற்றுப்பாதையை ஒட்டி, அன்றைய ஆளும்கட்சியினரால் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்களின் மதிப்பை உயர்த்தவே, மாற்றுப்பாதை திட்டம் என்ற குற்றச்சாட்டும் கிளம்பியது. தேர்தல் காரணமாக பணிகள் நின்றன; ஆட்சி மாற்றத்துக்குப் பின், அது கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக வேறு ரோடுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கலாம் என்ற ஆலோசனையையும், பல்வேறு அமைப்பினரும் முன் வைத்தனர். சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்திலும், இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
அதற்கு விளக்கமளித்த மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 'கோவை-பொள்ளாச்சி ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின், மாற்றுப்பாதையில் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.அத்துடன், போக்குவரத்து விதிகளின் அடிப்படையில், தற்போதுள்ள போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பின்படியும் ஆய்வு நடந்து வருவதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு பதிலளித்துள்ளனர். இதனால், உத்தேச மாற்றுப்பாதைத் திட்டம் கைவிடப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது-நமது நிருபர்-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X