குனியமுத்தூர்:குனியமுத்தூரில் குறிச்சி குளக்கரையை ஒட்டி, சதாம் நகர், காந்தி நகர், திருவள்ளுவர் நகர் ஆகியவை உள்ளன. இங்கு வசிப்போருக்கு, அறிவொளி நகர் அருகே குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இவர்கள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. காலி செய்யாதவர்களின் வீடுகள், போலீசாரின் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டு வருகிறது,நேற்று காலை, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா மேற்பார்வையில், சதாம் நகரில் எட்டு வீடுகள் இடிக்கப்பட்டன. காந்தி நகரில் சில வீடுகளை இடித்த நிலையில், ஒருவர் மட்டும் தனது வீட்டினுள் புகுந்து கொண்டு, வெளியே வர மறுத்தார். போலீசார் அவரை அப்புறப்படுத்தினர். அப்போது 15க்கும் மேற்பட்டோர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்தது.இச்சமயத்தில் அங்கு வந்த எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முஸ்தபா, மாவட்ட கலெக்டரிடம் பேசி, 33 வீடுகளை இடிக்க கால அவகாசம் கேட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, ரூ.1.89 லட்சம் கட்ட கூறுவதை பரிசீலித்து, மற்ற ஒதுக்கீட்டாளர்களிடம் வசூலித்த, 36 ஆயிரம் ரூபாய் கட்டவும் நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளதாக, அதிகாரிகளிடம் கூறினார்.
கோரிக்கையை பரிசீலிப்பதாக கலெக்டர் கூறியதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அக்குறிப்பிட்ட 33 வீடுகளில் இடிக்கப்பட்ட இரு வீடுகளை தவிர, பிற வீடுகள் இடிப்பது நிறுத்தப்பட்டது. மீதமுள்ள வீடுகளில், 42 வீடுகள் இடிக்கப்பட்டன. மாலை, 5:00 மணி வரை நடந்த இப்பணிக்காக, போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள், போலீசார் என, 110 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.