அன்னுார்:'தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு பதில் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம்,' என, மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை மத்திய நெடுஞ்சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அப்போது அன்னூர் மற்றும் கோவில்பாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், குரும்பபாளையம் முதல் அன்னூர், புளியம்பட்டி, சத்தி வழியாக, கர்நாடக எல்லை வரை, புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு 840 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் அருகில் உள்ள நிலங்களும் சேர்ந்து 3000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும்.பல ஆயிரம் மரங்கள் அகற்றப்படும்.
கிணறுகள் மூடப்படும். வீடுகள், தொழிற்சாலைகள் அகற்றப்படும். சிறு, குறு விவசாயிகள் பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுவர். கால்நடை வளர்ப்பு அழியும். 50 ஆண்டுகளாக நாங்கள் எதிர்பார்த்து வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டம் 98 சதவீதம் நிறைவேறி விட்டது. இன்னும் சில மாதங்களில் குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. இந்த நிலையில், விவசாய நிலங்களை அழிப்பது வேதனைக்குரியது. ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையில் போதுமான அகலம் உள்ளது.தேவைப்படும் இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கலாம்.
பெரும்பாலான நகரங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்தே சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்கின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழிப்பதை கைவிட்டு, ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தி உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது உடன் இருந்த பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா ஆகியோர் இந்த கோரிக்கை குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் தெரிவிப்பதாகவும், டில்லியில் அமைச்சர் நிதின் கட்காரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.