மறைமலை நகர்: தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களின் கல்விக்கு பணம் வசூலிப்பதில் கறாராக இருப்பதாகவும், தவணை முறையில் கூட பணம் செலுத்த அனுமதிப்பது இல்லையெனவும், பெற்றோர் புகார் கூறுகின்றனர். மேலும், வேறு பள்ளிக்கு மாறுவதற்கு மாற்று சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பதால் அவதியடையும் அவர்கள், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய சுற்றுப் பகுதிகளில், தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் அதிகளவில் தங்கியுள்ளனர். பெரும்பாலும் வாடகை வீடுகளில் குடியிருந்து, சென்னை சுற்றுப்புற பகுதிகளில் வேலை செய்கின்றனர்.
இவர்கள், தங்களின் பிள்ளைகளை மேற்கண்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பல பிரபலமான தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக பெரும்பாலான நடுத்தர மக்கள், வருமானம் குறைந்தததால் இந்தாண்டு, தங்களின் குழந்தைகளை அரசு பள்ளி அல்லது கட்டணம் குறைவாக உள்ள தனியார் பள்ளிகளுக்கு மாற்றி வருகின்றனர்.
அவ்வாறு வேறு பள்ளிக்கு மாற்ற, மாற்று சான்றிதழ்களை குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் சென்று கேட்டால், 'நாளை நாளை' என அலைக்கழிப்பதாக, பெற்றோர் கதறுகின்றனர்.
மேலும், 'நடப்பு ஆண்டுக்கான முழு கட்டணத்தையும் கட்ட வேண்டும், மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவித்தால் மட்டுமே மாற்று சான்றிதழ் தருவோம்' எனக்கூறி, அவர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றனர்.
திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த பெற்றோர் எஸ்.தாமோதரன் என்பவர் கூறியதாவது:என் மகள், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியில், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.என் வருமானத்தை கருதி, அந்த பள்ளியில் இருந்து அவரை மாற்ற நினைத்தேன். குறைந்த கட்டணம் உடைய வேறு தனியார் பள்ளிக்கு மாற்ற முடிவு செய்து, அந்த பள்ளியில், இரண்டு மாதங்களுக்கு முன்பே மாற்று சான்றிதழ் கேட்டேன்.
அந்த பள்ளி நிர்வாகம், என்னை தொடர்ந்து அலைக்கழித்து வந்ததுடன் 32 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்தனர். அதன் பிறகே, மகளின் மாற்று சான்றிதழை தந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைமலை நகரைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒரு மாணவனின் தாய் கூறியதாவது:
என் மகன், வடக்குபட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயில்கிறான். நான் மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, உணவு தயாரிக்கும் கேண்டீனில் வேலை செய்து, அவனை படிக்க வைக்கிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பண நெருக்கடியால், அதே பள்ளியில் என் மகனை படிக்க வைக்க முடியவில்லை.
எனவே, பள்ளியில் சென்று மாற்று சான்றிதழ் கேட்டபோது, 'இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும்' என்றனர்.மேலும், 'இப்போதே 'டிசி' வேண்டுமென்றால் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்று செல்லுங்கள்' என, பள்ளி நிர்வாகிகள் கூறினர்.
இவர் அவர் கூறினார்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த பகுதிகளை சுற்றி உள்ள பல பிரபலமான பள்ளிகளில், இது போன்ற சம்பவங்கள் தொடந்து நடந்து வருகின்றன.கடந்த கல்வி ஆண்டின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், தேர்ச்சி பெறவில்லை என மாற்று சான்றிதழ் அளிப்போம் என்கின்றனர்.
மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்து பெறப்படும் மாணவர்களின் மாற்று சான்றிதழ்களில், மாணவர்களின் மொழி, மதம் உள்ளிட்டவற்றை வேண்டும் என்றே மாற்றி தருகின்றனர்.அரசு பள்ளிகளில், மாற்று சான்றிதழ் இல்லாமல், பிறப்பு சான்றிதழ் மட்டுமே வைத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பிள்ளைகளை சேர்க்கும் வசதி உள்ளது.
அவ்வாறு அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கு எடுக்கும் பட்சத்தில் மாற்று சான்றிதழ் தராமல் அடாவடி செய்யும் பள்ளிகளை எளிதில் அடையாளம் காணலாம்.இந்த பிரச்னை குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்கள் வருமானத்தை விட பல மடங்கு அதிகம் கட்டணம் உள்ள பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர்.அவற்றை தங்களுக்கு சாதகமாக நினைக்கும் சில தனியார் பள்ளிகள், பல காரணங்களை சொல்லி, பெற்றோரிடம் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது, பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ் பெற வேண்டுமென்றால், அடுத்த கல்வி ஆண்டின் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்ற நிலையை, தனியார் பள்ளிகள் உருவாக்கிஉள்ளன.
வாய்ப்பு மறுப்பு
கொரோனாவுக்கு முன், பள்ளி கட்டணத்தை மூன்று அல்லது நான்கு தவணைகளில் செலுத்த, நிர்வாகங்கள் வாய்ப்பு கொடுத்தன.கொரோனாவுக்கு பின், ஓராண்டுக்கான கல்வி கட்டணத்தை ஒரே தவணையில் கட்டும்படி கெடுபிடி காட்டுகின்றனர் இது, நடுத்தர மக்களுக்கு சிரமமாக உள்ளது.என் இரு பிள்ளைகளுக்கு, நகைகளை அடமானம் வைத்து, கல்வி கட்டணம் செலுத்தி உள்ளேன்.கட்டண தொகையை, பழையபடியே மூன்று தவணையில் செலுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.முரளிகிருஷ்ணன், பெற்றோர், ஊரப்பாக்கம்.
அழைப்பு துண்டிப்பு
மாற்று சான்றிதழ் தருவதில் தனியார் பள்ளிகளின் செயல்பாடு மீதான புகார்கள் குறித்து, மாவட்ட கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.புகார் அளிக்க தொலைபேசி எண்கள் குறித்து கேட்டபோது, அழைப்பை துண்டித்துவிட்டார்.