மதுரை, : கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரவுடி கட்டைராஜா மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் ஆறுமுகம், செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் 3 பேரையும் காணொலியில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சென்னியமங்கலம் செந்தில்நாதன். 'டாஸ்மாக் பார்' நடத்தினார்.
இவருக்கும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ரவுடியான கட்டைராஜா 43, இடையே கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டது. கட்டைராஜா சிலருடன் சேர்ந்து 2013 ஜூன் 18ல் செந்தில்நாதனை மாடாகுடி பகுதியில் வெட்டிக் கொலை செய்தார். பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கட்டைராஜாவிற்கு துாக்கு தண்டனை, கும்பகோணம் திப்பிராஜபுரம் ஆறுமுகம், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி செல்வத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்.,12 ல் உத்தரவிட்டது. கட்டைராஜா மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.கீழமை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிக்கும்பட்சத்தில் அதை பரிசீலித்து இறுதி முடிவெடுக்க உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது வழக்கம். அதன்படி இவ்வழக்கு உயர்நீதிமன்றக் கிளைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மதுரை மத்திய சிறையிலுள்ள கட்டைராஜா, ஆறுமுகம், செல்வம் காணொலி மூலம் ஜூன் 15 ல் ஆஜராகினர்.
நீதிபதிகள்: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, உங்கள் தரப்பில் ஆஜராகி வாதிட வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள உரிமை உள்ளது. துாக்கு தண்டனை வழக்கை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். நீங்கள் வழக்கறிஞரை நியமிக்கத் தவறும்பட்சத்தில், வழக்கறிஞரை நியமிக்க உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது என்றனர்.
கட்டைராஜா உட்பட 3 பேர்: பொருளாதார வசதி குறைவாக உள்ளது. பணம் ஏற்பாடு செய்து வழக்கறிஞரை நியமித்துக் கொள்கிறோம் என்றனர்.ஜூன் 29 வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று விசாரித்தது. கட்டைராஜா உட்பட 3 பேர் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.நீதிபதிகள்: கட்டைராஜா உட்பட 3 பேரையும் இன்று (ஜூன் 30) காணொலி மூலம் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆஜர்படுத்த வேண்டும் என்றனர்.