துப்பாக்கி சுடும் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள்; உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.,தகவல் | மதுரை செய்திகள் | Dinamalar
துப்பாக்கி சுடும் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள்; உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.,தகவல்
Added : ஜூன் 29, 2022 | |
Advertisement
 


மதுரை : ஸ்ரீவில்லிபுத்துாரில் காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டிய அவசியமில்லை; பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்ற விருதுநகர் எஸ்.பி.,யின் அறிக்கையை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது.ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்குளம் ராமசுப்பு தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை-கொல்லம் ரோடு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பூவாணியில் காவல்துறைக்குச் சொந்தமான துப்பாக்கி சுடும் தளம் உள்ளது.

அருகில் சாம்பல்நிற அணில்கள் சரணாலயம், குடியிருப்புகள் உள்ளன. துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டு வெளியேறி மக்கள், வனவிலங்குகள், பறவைகள் மீது விழுந்து பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் இன்றி பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.துப்பாக்கி சுடும் தளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராமசுப்பு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.விருதுநகர் எஸ்.பி.,மனோகர் தாக்கல் செய்த அறிக்கை: மதுரை-கொல்லம் ரோட்டிலிருந்து 1 கி.மீ.,துாரத்தில் துப்பாக்கி சுடும் தளம் உள்ளது.

அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. அதில் பறவைகள், வனவிலங்குகள் இல்லை. இம்மையம் 57 ஆண்டுகளாக செயல்படுகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. போதிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பயிற்சி துவங்குவதற்கு முன் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்யும் வகையில் சிவப்புக் கொடி ஏற்றப்படுகிறது. பயிற்சியின்போது சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சுற்றுச்சுவர் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. மனுதாரர் அனுமானத்தின் அடிப்படையில் மனு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்தனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X