சிவகாசி:வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாராய்ச்சியில், முன்னோர் தொழில் செய்ததற்கு ஆதாரமாக சுண்ணாம்பு நிரம்பிய பெரிய பானை கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரையிலும் தோண்டப்பட்ட குழிகளில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு வட்ட சில்லுகள், சூதுபவளம், தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாட்டுக் குவளை, விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன.
இந்நிலையில் தோண்டிய 8 வது குழியில், ஒரே இடத்தில் அருகருகே சுண்ணாம்பு நிரம்பியிருந்த பெரிய பானை, இதற்கு உதவியாக சிறிய பானைகள் கிடைத்துள்ளது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, ''ஏற்கனவே பானைகள் கிடைத்தன. தற்போது 8 வது குழியில் சுண்ணாம்பு நிரம்பிய பெரிய பானை கிடைத்துள்ளது. அருகிலேயே சிறிய பானைகளும் உள்ளன. இதனால் அக்காலத்திலேயே சுண்ணாம்பை வைத்து தொழில் செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் பெரிய அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.