திருச்சி:முசிறியில் வேன் கட்டணம் செலுத்தாத மாணவனுக்கு, தனியார் பள்ளி நிர்வாகம் 'டிசி' கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே, வெள்ளூர் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், கலைச்செல்வி தம்பதியின் மகன் சுதீஷ்வரன், 6. முசிறியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்படும் வேனில், தினமும் பள்ளிக்கு சென்று வந்த சிறுவனை, வேன் கட்டணம் செலுத்தவில்லை என கூறி, நேற்று காலை, வேனில் ஏற்ற மறுத்துஉள்ளார், பள்ளி உதவியாளர்.
இதனால், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த வேனை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறுவனை வேனில் அழைத்துச்சென்றுள்ளனர்.அதன் பின், சிறுவனின் தாய் கலைச்செல்வியை நேரில் வருமாறு பள்ளி நிர்வாகம் அழைத்துள்ளது. பள்ளிக்கு சென்ற அவரிடம், சிறுவனின் டி.சி.,யை கொடுத்துள்ளனர். அதை அவர் வாங்க மறுத்ததால், வீசி எறிந்துள்ளனர்.
இது குறித்து, சிறுவனின் பெற்றோர், முசிறி டி.எஸ்.பி., அருள்மணி, முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தனிடம் புகார் அளித்துள்ளனர்.