தாம்பரம்:தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், 3,500 பேரின் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் தேங்கி கிடப்பதாக, புகார் எழுந்துள்ளது.
போலீசார் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, மற்ற பணிகள் முடிந்து, விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். சில மாதங்களுக்கு முன், கமிஷனரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும், நுண்ணறிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.புதிதாக வந்தவர்களுக்கு, ஏற்கனவே காவல் நிலையங்களில் உள்ள பணிகளுடன், பாஸ்போர்ட் விண்ணப்பங்களையும் பார்க்க வேண்டி உள்ளது. விண்ணப்பதாரர்களின் முகவரியை தேடி கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு சிரமம் இருப்பதாலும், பணிகளை முடிக்க முடியவில்லை.
இதனால், மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் வேலை தொடர்பாக, வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டியவர்கள், பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். கமிஷனர் அலுவலக, உயர் அதிகாரி கூறுகையில், 'பாஸ்போர்ட் கோரி வந்த விண்ணப்பங்கள் தேங்கி கிடப்பது உண்மை தான். விரைவில், அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இது ஒருபுறமிருக்க, சென்னை போலீஸ் கமிஷனரக, தென் மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தின் கீழ், புறநகரில் இயங்கி, தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்துடன் இணைக்கப் பட்ட,15 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு, மூன்று மாதங்களுக்கு உணவுப் படி வழங்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.இதே போல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து இணைக்கப்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு, ஏழு மாதங்களுக்கான உணவுப்படி வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.