சிவகங்கை:பெங்களூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் ஒக்கூருக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 2.5 லட்சம் ரூபாய் குட்கா, மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பன்னார்கட்டாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, 'கூல் லீப்' போன்ற போதை வஸ்துகளை கடத்தி விற்பதாக தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்கிற்கு புகார் சென்றது.தனிப்படையினர் எஸ்.ஐ., கணேஷ் பாபு தலைமையில் நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியை பின்தொடர்ந்தனர்.
சிவகங்கை ஒக்கூரில் சூப்பர் மார்க்கெட் அருகே இறக்க முயன்றபோது, கன்டெய்னர் லாரியில் சோதனை நடத்தினர்.லாரியில் வீட்டு உபயோக பொருட்களுக்கு இடையே சாக்கு மூடையில் குட்கா, கூல் லீப் மற்றும் வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன.போலீசார், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 450 கிலோ போதை பொருட்கள், கன்டெய்னர் லாரி மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.
சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஆரோக்கியம் மகன் தேவதாஸ், 34, லாரி டிரைவர் பெங்களூரு அழகேசன் 26, லோடுமேன் ஒக்கூர் ராமநாதன், 21, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய சிவகங்கை தினேஷ், 27, என்பவரை தேடிவருகின்றனர்.விசாரணையில் பெங்களூரில் இருந்து கன்டெய்னர் லாரியில் அடிக்கடி போதை பொருட்களை கடத்தி வந்து ஒக்கூர் சூப்பர் மார்க்கெட் கோடவுனில் வைத்து, கார்களில் தென்மாவட்டங்களில் விற்பனை செய்தது தெரிந்தது.