சென்னை:நன்னடத்தை விதிமீறி, பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ரவுடிக்கு 272 நாள் சிறை தண்டனை வழங்கி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
சென்னை சூளைமேடு, அவ்வை நகர், இந்திரா காந்தி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 33; சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட ஐந்து வழக்குகள் உள்ளன.இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் முன், ராஜ்குமார், 'திருந்தினேன்; இனி குற்றச் செயலில் ஈடுபட மாட்டேன்' என, நன்னடத்தை பிணை உறுதி மொழி எழுதி தந்தார்.
இந்த நிலையில், ஷெனாய் நகர், மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 17ம் தேதி பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இது குறித்த புகாரின்படி, சூளைமேடு போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.திருந்தி வாழப்போவதாக கூறி, மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட ராஜ்குமாருக்கு, பிணையில் வர முடியாத படி, 272 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பிறப்பித்தார்.