மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென் மற்றும் கோவிலாஞ்சேரி கிராமங்களில், நகர்ப்புற நில மேம்பாடிற்காக 740 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில், தரமான சாலை, பூங்காக்கள், பள்ளிகள் அமைக்கப்படுவதுடன், முறையாக மனைப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, சகல வசதிகளுடன் தலை சிறந்த குடியிருப்பு பகுதிகளாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில், தரமான சாலை, பூங்கா, பள்ளி, சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் என, என சகல வசதிகளுடன் கூடிய திட்டமிட்ட நகர் பகுதியை உருவாக்கும் வகையில், நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வளர்ச்சி திட்டம்
அதன் படி, நகர்ப்புறம் அல்லது அதை ஒட்டிய குறிப்பிட்ட பகுதிகளில், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை மொத்தமாக தொகுத்து, அப்பகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, சாலை வசதி, பூங்கா, பள்ளி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில், அவ்வகை வசதிகளை ஏற்படுத்துவதுடன், தரமான, முறைப்படுத்தப்பட்ட சாலைகள் அமைத்து, அங்குள்ள மனைப்பிரிவுகளும் முறைப்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென் மற்றும் கோவிலாஞ்சேரி ஆகிய மூன்று கிராமங்களில், அரசு மற்றும் தனியார் நிலங்கள் என, ஒட்டுமொத்தமாக, 740 ஏக்கர் நிலத்தை தொகுத்து, அப்பகுதியை மேம்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இங்கு, முழுமையான நகர்ப்புற வளர்ச்சி ஏற்படும் போது தேவைப்படும் சாலைகள், வடிகால்கள், பூங்காக்கள் ஆகியவை ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்டு, அதற்கான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஒரே சீரான முறையில் சாலைகள், தெருக்கள் வரையறுக்கப்பட்டு மனைகள் பிரிக்கப்படும்.இதற்காக பெறப்படும் தனியார் நிலங்களுக்கு ஈடாக, மேம்படுத்தப்பட்ட மனைகள், அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
'அம்ரூத்' திட்டம்
இதனால், நிலம் கையகப்படுத்தும் வகையிலான செலவு மிச்சமாவதுடன், திட்டமிட்ட நகரங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், சென்னையை ஒட்டி அமைந்துள்ள மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி பகுதிகளில் நிலத்தை தேர்வு செய்து, அதை தொகுத்து வகைப்படுத்தி, மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கையால், அனைத்து வசதிகளும் அடங்கிய, மேம்படுத்தப்பட்ட திட்டமிட்ட நகர் பகுதியை உருவாக்க முடியும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரத்யேக வரைபடம் தயாரிப்பு!
இது குறித்து சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
இத்திட்டத்துக்காக, தற்போதைய நிலவரப்படி பெரிய கட்டுமானங்கள் இல்லாத, 740 ஏக்கர் காலி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலங்கள், சர்வே எண் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு வகைபடுத்தப்படும்.
இதில், தனியார், அரசு நிலங்கள் உள்ளதால், இங்கு நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலில், செயற்கை கோள் வரைபட அடிப்படையில், நில தொகுப்பு மேம்பாட்டு வரைவு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
சாலைகள், பொது பூங்காக்கள், மனைகள் ஆகியவற்றுக்கான உத்தேச வடிவமைப்புகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசு துறைகள் பங்கேற்புடன், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் கருத்து அடிப்படையில், நில தொகுப்பு திட்ட விதிகளில், தேவையான திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நில தொகுப்பு திட்டத்தால்
ஏற்படும் பயன்கள் l நிலத்தின் உரிமை, அதன் உரிமையாளர்களிடமே இருக்கும்l சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், மனைகள் சீரமைக்கப்படும்l நிலத்தின் விற்பனை மதிப்பு வெகுவாக உயரும்l பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பகுதி மேம்படுத்தப்படும்l மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதுடன், பிற புறநகர் பகுதிகளுக்கு சென்று வருவது எளிதாகும்l நிலம் கையகப்படுத்துவதற்கான காலம், நிதி செலவு தவிர்க்கப்படும்l சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய பிரிவினருக்கு, உரிய மனைகள் முறையாக ஒதுக்கப்படும்l சுற்றுச்சூழலுக்கு மதிப்பளித்து உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- நமது நிருபர் -