ஸ்ரீவில்லிபுத்துார் : - ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான செண்பகத்தோப்பு கோயில்களுக்கு செல்பவர்களிடம் வனத்துறை சார்பில் ரூபாய் 20 சேவை கட்டணம் வசூலிப்பது பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள செண்பகத் தோப்பு பகுதி ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானது. இங்குள்ள வனப்பேச்சி அம்மன் ,காட்டழகர் கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
ஆடி மாதம், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறுகிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து கோயில்களுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.இவ்வாறு வருபவர்களின் டூ வீலர், ஆட்டோ, கார், வேன் வாகனங்களுக்கு மட்டுமே இதுவரை கோயில் நிர்வாகம் சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆனால், கடந்த சில நாட்களாக செண்பகத்தோப்புக்கு வரும் பக்தர்களிடம் ஒரு நபருக்கு ரூ. 20 வீதம் வனத்துறை சார்பில் சேவைக்கட்டணம் வசூலித்து வருகிறது.
இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மனவேதனையும் அளித்துள்ளது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் கழிவுகளை அப்புறப்படுத்த, வனம் சூழல் மேம்பாட்டு குழு மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான செலவினங்களுக்காக சேவை கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான தோப்பிற்குள் செல்வதற்கு ஏற்கனவே கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது வனத்துறை சேவைக் கட்டணம் வசூலிப்பது சரியானது அல்ல, ஒரே இடத்திற்கு இரு அரசுத்துறைகள் கட்டணம் வசூலிப்பது தவறு என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.கோயில் செயல் அலுவலர் முத்துராஜா கூறியதாவது,'' வனத்துறையின் இத்தகைய நடவடிக்கை சட்டபூர்வமாக சரியானது தானா என்பது குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டு உள்ளோம். அதன்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.